Published : 25 Apr 2025 06:24 PM
Last Updated : 25 Apr 2025 06:24 PM
சென்னை: சென்னையில் ரவுடிகள் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கடந்த 8 மாதங்களில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2,774 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 417 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க சென்னையில், முதன் முதலாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இப்பிரிவு போலீஸார், காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக போதைப்பொருள் குற்றவாளிகளை 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கின்றனர்.
இதையடுத்து, கடந்த 8 மாதங்களில் சென்னையில் கஞ்சா, போதை மாத்திரை, அபின், மெத்தம் பெட்டமைன் உள்பட 1,044 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், தொடர்புடைய 2,774 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பெங்களூரு, மும்பை, டெல்லி, மணிப்பூர், கர்நாடகா, ஒடிசா, அசாம், திரிபுரா உள்பட பல்வறு மாநிலங்களைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் சுற்றி வளைக்கப்பட்டது.
இதேபோல் 20 நைஜீரியர்கள், 1 கேமரூன், 1 சூடான் என மொத்தம் 22 வெளிநாட்டவர்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 80 பேரும் கைது செய்யப்பட்டனர். சினிமா துறையில் போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பதை கண்டறிந்த போலீஸார் துணை நடிகை எஸ்தர் என்ற மீனாவையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினோம். 2024ம் ஆண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட 300 பேரும், இந்த ஆண்டில் கடந்த மார்ச் மாதம் வரையில் 52 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரவுடி ஒழிப்பு: இதுஒருபுறம் இருக்க ரவுடி ஒழிப்பு போலீஸாரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குழுக்களை கண்காணித்து வருகின்றனர். அதன்படி, 4,300 ரவுடிகள், 476 பெரிய ரவுடி குழுக்கள், 223 சிறிய ரவுடி குழுக்களும் கண்காணிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான குழுக்களை முடக்கி உள்ளோம். 32 ‘ஏ பிளஸ்’ ரவுடிகள், 108 ‘ஏ’ வகை ரவுடிகள், 325 ‘பி’ வகை ரவுடிகள், 549 ‘சி’ வகை ரவுடிகள் என 417 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளோம். மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 35 ரவுடிகளையும் கைது செய்துள்ளோம். பொது மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT