Published : 21 Apr 2025 06:34 PM
Last Updated : 21 Apr 2025 06:34 PM
நாகர்கோவில்: அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ உட்பட 3 பேருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ராஜேஷ்குமார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு குமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஜோசப், பால்துரை, அவரது மனைவி சுபிதா ஆகியோர் அரசு புறம்போக்கு நில பகுதியோடு ஒட்டியிருந்த தங்களது நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். இதில் அரசு புறம்போக்கு நிலமும் அபகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய வருவாய் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் நிலத்தை அளவீடு செய்தபோது ஜோசப், பால்துரை, சுபிதா மற்றும் உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவர்களுக்கு ஆதாரவாக ராஜேஷ்குமார் எம்எல்ஏ, ஆமோஷ், டிட்டோ ஆகியோரும் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற வருவாய்த் துறை மற்றும் அரசு அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருங்கல் போலீஸார் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, ஆமோஷ், டிட்டோ, ஜோசப், பால்துரை, சுபிதா ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 11 ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய ஜோசப், பால்துரை, டிட்டோ ஆகியோர் இறந்து விட்டனர். இதனால் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்கிய குற்றத்திற்காக ராஜேஷ்குமார் எம்எல்ஏ. ஆமோஷ், சுபிதா ஆகிய 3 பேருக்கும் தலா 3 மாதம் சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து முதன்மை உதவி அமர்வு நீதிபதி ஹசன் முகமது தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT