Last Updated : 21 Apr, 2025 01:29 PM

 

Published : 21 Apr 2025 01:29 PM
Last Updated : 21 Apr 2025 01:29 PM

‘அப்பாவை என் அம்மா தான் கொன்றிருப்பார்’ - கர்நாடகா முன்னாள் டிஜிபி கொலையில் மகன் சந்தேகம்!

பெங்களூரு: கர்நாடக காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்நிலையில், அவரது மகன் கார்த்திகேஷ், இந்த கொலையில் தனது அம்மா பல்லவி மீது சந்தேகம் இருப்பதாக போலீஸார் வசம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்லவி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கு மனநோய் பாதிப்பு இருப்பதாக தனது புகாரில் கார்த்திகேஷ் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த ஓம் பிரகாஷ், தனது மனைவியை அவ்வப்போது மிரட்டி வந்தார் என உறவினர்கள் கூறியுள்ளனர். அதற்கான துப்பாக்கி மாதிரியான ஆயுதங்களை அவர் பயன்படுத்தி உள்ளார் என்றும் தகவல். மேலும், பல்லவி தேவையற்ற விஷயங்களை கற்பனை செய்து பதட்டமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

“என் அம்மா பல்லவியும், என் சகோதரி கிருதியும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, என் அப்பாவோடு அடிக்கடி சண்டை போடுவார்கள். என் அப்பாவின் கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன்.

கடந்த ஒரு வாரமாக அப்பாவை கொலை செய்து விடுவேன் என அம்மா மிரட்டி வந்தார். இந்த மிரட்டல்கள் காரணமாக, என் அப்பா அவரது சகோதரி வீட்டில் தங்கச் சென்றார். அங்கிருந்து அவரை வலுக்கட்டயாமாக திரும்ப அழைத்து வந்தனர்” என தனது புகாரில் கார்த்திகேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போலீஸ் டிஜிபி ஓம் பிரகாஷை கொலை செய்ததை பல்லவி ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. போலீஸாருக்கு இந்த கொலை குறித்து தகவல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20) மாலை கிடைத்துள்ளது. ஓம் பிரகாஷ் வீட்டுக்கு அவர்கள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கூர்மையான ஆயுதத்தை கொண்டு குத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவரது உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x