Published : 20 Apr 2025 01:24 PM
Last Updated : 20 Apr 2025 01:24 PM
சென்னையில் காணாமல் போன 12 வயது சிறுமி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடலூரில் மீட்கப்பட்டார்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி சற்று ஞாபக மறதி உடையவர். இந்நிலையில், 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. சிறுமியின் தாய் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சிறுமியை தேடினர். ஆனாலும், சிறுமியை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இந்த வழக்கு 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், தனிப்படை அமைத்து காணாமல் போன அனைவரையும் கண்டுபிடிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அரும்பாக்கம் போலீஸார் காணாமல் போன சிறுமியை தேடும் பணியை தனிப்படை அமைத்து மீண்டும் துரிதப்படுத்தினர். மாவட்டம் வாரியாக சிறுமியை போலீஸார் தேடி வந்த நிலையில், அந்தச் சிறுமி கடலூரில் உள்ள காப்பகத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் தாயாரை அழைத்துச் சென்று உறுதி செய்தனர்.
தற்போது, சிறுமிக்கு 19 வயது நிரம்பியிருந்ததால், உரிய சட்ட நடவடிக்கைகளுடன் மீட்டு, அவரது தாயாரிடம் போலீஸார் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். 6 ஆண்டுகளுக்குப் பிறகு, காணாமல் போன தனது மகளை மீட்டுக் கொடுத்த அரும்பாக்கம் போலீஸாருக்கு சிறுமியின் தாய் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT