Published : 20 Apr 2025 09:48 AM
Last Updated : 20 Apr 2025 09:48 AM
கிண்டி கத்திபாரா மேம்பாலம் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஓட்டுநரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (42). இவர் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கத்திப்பாரா மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. தொடர்ந்து நிற்காமல் அந்த கார் அடுத்தடுத்து சாலையில் சென்ற 2 இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், வாகன ஓட்டிகள் முத்துசாமி (42), நூக்கம்பாளையத்தை ச் சேர்ந்த சரவணன் (32), மேற்கு கே.கே.நகரைச் சேர்ந்த சுந்தர் ராஜ் (59), குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆராதனா (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், காயம் அடைந்தவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் பெரம்பலூர் மாவட்டம் கழனிவாசலைச் சேர்ந்த புஷ்ப ராஜ் (39) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், புஷ்ப ராஜ் ஒட்டி வந்த கார் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் என்பதும், மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, புஷ்ப ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT