Published : 18 Apr 2025 06:46 PM
Last Updated : 18 Apr 2025 06:46 PM
கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் 5 பேர் மீது 4-வது கூடுதல் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இவர்கள், கரோனா காலத்தில் போலிச்சான்றிதழ் தயாரித்ததன் மூலம் கிடைத்த பணத்தை, கோவை கார் வெடிப்புச் சம்பவத்துக்கு தேவையான வெடிபொருட்கள் வாங்க பயன்படுத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த, அதேப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (28) என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தாக்குதல் நடத்தி, உயிரிழப்பை ஏற்படுத்த இக்கும்பல் திட்டமிட்டது தெரியவந்தது.
இவ்வழக்கு தொடர்பாக 17 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது என்ஐஏ அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக குற்றப்பத்திரிகை, கூடுதல் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி, கடைசியாக கடந்தாண்டு இறுதியில் கைது செய்யப்பட்ட போத்தனூரைச் சேர்ந்த அபுஹனிபா, செல்வபுரத்தைச் சேர்ந்த சரண் மாரியப்பன், உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த பவாஸ் ரகுமான், ஷேக் ஹிதாயத்துல்லா, உமர் பாரூக் ஆகியோர் மீதும் நேற்று (ஏப்.17) சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் 4-வது கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
போலி சான்றிதழ் தயாரிப்பு: இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கோவை கார் வெடிப்புச் சம்பவத்துக்கு இவர்கள் 5 பேரும் நிதி அளித்துள்ளதோடு, மேற்கண்ட சம்பவத்தில் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது. கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த இக்கும்பலுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் திட்டமிட்ட காலம் கரோனா தொற்று பரவி ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்த காலம் என்பதால், எவ்வாறு நிதி திரட்டுவது என ஆலோசித்துள்ளனர்.
அப்போது, வெளிநாடுகளுக்கு செல்ல விமானப் பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. இதைப் பயன்படுத்தி அமீர், உமர் பாரூக் ஆகியோர் 2021-22-ம் காலகட்டத்தில் போலியாக கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை தயாரித்து கொடுத்துள்ளனர். அதில் கிடைத்த பணத்தை கார் வெடிப்புக்கு தேவையான வெடி மருந்துகள், பொருட்கள் வாங்குவது என பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். போலி சான்றிதழ் தயாரிப்புக்கு பவாஸ் ரகுமான், சரண் மாரியப்பன் ஆகியோர் உதவி புரிந்துள்ளனர்.
இந்தப் பணிகளுக்கு அபுஹனிபா பணம் கொடுத்து உதவியுள்ளார். மேலும், இவர்கள், வையூரில் உள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் சிலரை சந்தித்ததும், சத்தியமங்கலம் காடுகளில் கூட்டாளிகளுடன் சதித்திட்டம் தீட்டியதும் முன்னர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், உயிரிழந்த முபின் ஐஎஸ்ஐஎஸ் கலீபாவான அபு-அல்-ஹசன் அல்-ஹாஷிமி அல் - குராஷிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியேற்றுள்ளார். தங்களது சித்தாந்தங்களை சாராதவர்களை கொல்வதையும் அவர் நோக்கமாக கொண்டிருந்தார்,” எனக் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT