Last Updated : 16 Apr, 2025 07:11 PM

2  

Published : 16 Apr 2025 07:11 PM
Last Updated : 16 Apr 2025 07:11 PM

வரதட்சிணையாக கேட்கப்பட்டதா நெல்லை ‘இருட்டுக் கடை’? - மருமகள் புகாரும், மாமனார் மறுப்பும்

நெல்லை இருட்டுக் கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங், கவிதா மற்றும் ஸ்ரீ கனிஷ்கா ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அல்வாவுக்கு புகழ்பெற்ற ‘இருட்டுக் கடை’யை வரதட்சிணையாக எழுதி தருமாறு கேட்டு மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டுவதாக கடை உரிமையாளரும், அவரது குடும்பத்தினரும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், வரதட்சிணை எதுவும் கேட்கவில்லை என்று மருகமனின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.

திருநெல்வேலி டவுனில் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியினரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா, தனக்கு கணவர் வீட்டில் இருந்து வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல் விடுவதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக இருட்டுக் கடை உரிமையாளர் கவிதா ஹரிசிங் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவுக்கும், கோவையை சேர்ந்த உறவினர் மகன் பல்ராம்சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடத்தி வைத்தோம்.

ஆனால், திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் என் மகளை வரதட்சிணை கேட்டு அவரது கணவர் பல்ராம் சிங் கொடுமைப்படுத்தி இருக்கிறார். அவரது குடும்பத்தினரும் என் மகளிடம் கூடுதல் வரதட்சிணை வேண்டும் என்றும், விலை உயர்ந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் ஒன்றையும் கேட்டுள்ளனர். அதை நாங்கள் புக் செய்து வைத்திருந்தோம். இந்நிலையில், எனது மகளின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இது குறித்து உன் தாயாரிடம் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் 15-ம் தேதி எனது மகள் கடும் மனவேதனையுடன் கோவையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்துவிட்டார்.

ஆனால், மறுநாளே எங்கள் வீட்டுக்கு வந்த மகளின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், உங்கள் மகளுடன் வாழ வேண்டும் என்றால் கூடுதல் வரதட்சிணை தர வேண்டும். மேலும் இருட்டுக் கடை அல்வா உரிமைத்தை மகளின் கணவர் பெயரில் எழுதித்தர வேண்டும் என மிரட்டினர். எனது மகளின் மாமனார் பாஜகவில் செல்வாக்குமிக்க நபருடன் தொடர்பில் இருப்பதாகவும், எங்கு சென்று புகார் அளித்தாலும் அதனை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவேன். பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகவும் எனக்கு தெரியும் என மிரட்டினர்.

இந்தப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அளித்துள்ளோம். கருணையுடன் அவரும் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கவிதா ஹரிசிங் மகளான கனிஷ்கா கூறும்போது, “உனது அம்மாவிடமிருந்து இருட்டுக் கடை அல்வா கடை உரிமத்தை என் பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும் என்று எனது கணவர் கேட்டார். என் கணவரும் அவரது குடும்பத்தாரும் என்னை மிகவும் கொடுமைபடுத்தினார்கள்” என்று தெரிவித்தார்.

மாமனார் மறுப்பு: இந்நிலையில், கோவையில் பல்ராம் சிங்கின் தந்தை யுவராஜ் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்த திருமணத்தில் ஒரு ரூபாய்கூட நான் வரதட்சிணை வாங்கவில்லை. என்னுடைய திருமணத்துக்கும் நான் வரதட்சிணை வாங்கவில்லை. என் மகனுடைய திருமணத்திலும், வரதட்சிணை வாங்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் ஒரு சாதாரண குடும்பத்தில் சென்று பெண் எடுத்தேன். நான் திருமண சம்பந்தம் எல்லாம் பேசி முடித்தப் பிறகுதான், இருட்டுக் கடையே அவர்களிடம் வந்தது.

அதுபோல, மருமகள் கனிஷ்கா அந்த கிளாஸுக்குப் போகிறேன், இந்த கிளாஸுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு 2 - 3 மணி நேரத்துக்கு வெளியேச் சென்றுவிடுகிறார். செல்போனில் தொடர்பு கொண்டால், பார்லருக்கு போய்விட்டதாக கூறுகிறார். ஒரு 5 மணி நேரமாக ஒரு பெண் வீட்டுக்கே வரவில்லை என்றால், என்ன சொல்வது? அதுபோல விட்டுவிட்டு இருக்கும் குடும்பமும் எங்களுடையது கிடையாது. இதையெல்லாம் கேட்டதால், சந்தேகப்படுகிறீர்களா? என்ற ரீதியில் பிரச்சினை ஆனது.

இன்று இவ்வளவு பெரிய பிரச்சினையாகி, என் மகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, கனிஷ்கா திருப்பிவிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே, மூன்று முறை திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நின்றுபோய் இருக்கிறது. என்ன காரணத்தால், திருமணம் நிறுத்தப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை. இந்த விவரங்களும் எங்களுக்கு திருமணம் முடிந்தபிறகுதான் தெரியவந்தது” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x