Published : 16 Apr 2025 06:11 AM
Last Updated : 16 Apr 2025 06:11 AM
திருநெல்வேலி / சென்னை: பாளையங்கோட்டை தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் அரிவாளால் வெட்டினார். இதைத் தடுத்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு நேற்று 8-ம் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மாணவர் திடீரென தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, அருகிலிருந்த சக மாணவரை வெட்டியுள்ளார்.
அங்கிருந்த மாணவ, மாணவிகள் சப்தம்போடவே ஆசிரியை ஓடி வந்து தடுத்துள்ளார். அப்போது, அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தலை, கழுத்து, கையில் வெட்டுப்பட்ட மாணவரும், காயமடைந்த ஆசிரியையும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் போலீஸார் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பென்சில் கொடுப்பது தொடர்பாக இரு மாணவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, சக மாணவரை அரிவாளால் வெட்டியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, அரிவாளால் வெட்டிய மாணவரை போலீஸார் பிடித்து, குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த மாணவரிடமும், வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்த தகவல் பரவியதால், பெற்றோர் திரண்டனர். பள்ளி வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் கூறும்போது, “பென்சில் தொடர்பாக இரு மாணவர்களிடம் ஏற்பட்ட பிரச்சினையே இதற்குக் காரணம். காயமடைந்த மாணவர் மற்றும் ஆசிரியைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரிவாளால் வெட்டிய மாணவரிடம், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மாணவருக்கு கவுன்சிலிங் கொடுக்க உள்ளோம். அவரும் ஒரு குழந்தைதானே” என்றார். இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சிவக்குமாரும் பள்ளியில் நேற்று மாலை விசாரணை மேற்கொண்டார்.
தலைவர்கள் கண்டனம்: தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிச் சிறுவர்கள் கைகளிலும் ஆயுதங்கள் புழங்கும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துகிடப்பது ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல,பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தமமுக தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT