Published : 15 Apr 2025 07:27 PM
Last Updated : 15 Apr 2025 07:27 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண் தூய்மைப் பணியாளரை ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் காலணியால் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த இதர தூய்மைப் பணியாளர்கள் திரண்டு வந்து தொழில்நுட்ப உதவியாளரை சரமாரியாகத் தாக்கினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது, 6 தளங்களில் ரூ.34 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால், ஒப்பந்த அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனை எக்ஸ்-ரே அறையில் இன்று துப்புரவுப் பணியாளர் உமா மகேஸ்வரி என்ற பெண் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சரியாக சுத்தம் செய்யுமாறு ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ராஜ் என்பவர் கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ராஜ் தனது காலணியால் உமா மகேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், உமா மகேஸ்வரி அழுதுகொண்டே அறையிலிருந்து வெளியே வந்தார்.
இதைப் பார்த்த மற்ற தூய்மைப் பணியாளர்கள் விசாரித்தபோது, காலணியால் தன்னை ராஜ் தாக்கியதை உமா மகேஸ்வரி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் திரண்டுவந்து எக்ஸ்-ரே ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ராஜை சரமாரியாகத் தாக்கினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, மற்ற மருத்துவ அலுவலர்கள் ராஜை மீட்டு அழைத்துச் சென்றனர்.
பெண் தூய்மைப் பணியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மற்ற அனைத்து தூய்மைப் பணியாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தொழில்நுட்ப உதவியாளர் ராஜை அழைத்துச் சென்று அருப்புக்கோட்டை நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT