Published : 13 Apr 2025 11:25 AM
Last Updated : 13 Apr 2025 11:25 AM

பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல் புகைப்படங்களை பயன்படுத்தி முதலீட்டு மோசடி: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை

பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பிரபலங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பயன்படுத்தி முதலீட்டு இணைய தளங்கள் மூலம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

பிரபலங்கள் பற்றி பரபரப்பான தலைப்புச் செய்திகளை வெளியிட்டும் அவர்களின் புகைப்படங்கள், காணொலிகளை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்டும், அவற்றின் மூலம் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்து பங்கு வர்த்தகம், கிரிப்டோகரன்சி, நிதி திட்டங்கள் வாயிலாக போலி முதலீட்டு மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல், சுதா மூர்த்தி, சத் குரு போன்ற பிரபலங்களின் புகைப்படங்கள், காணொலிகளை பயன்படுத்தி, அவர்கள் குறிப்பிட்ட சில வர்த்தக தளங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பது போன்று பதிவுகளை வெளியிட்டு அந்த பதிவை கிளிக் செய்யும்போது, அது போலியான வலைதளங்களுக்கு திருப்பிவிடப்பட்டு, அதன்மூலம் போலியான மோசடி முதலீடுகள் நடைபெறுவதை சைபர் கிரைம் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

எனவே, அத்தகைய பதிவுகளை கண்டறிந்து சமூக ஊடகங்களில் இருந்து நீக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், இதுவரை ஸ்ரேயா கோஷல் சில வர்த்தக தளங்களை ஊக்குவித்ததாகக் கூறப்படும் தவறான தகவல்களைக் கொண்ட 25 எக்ஸ் தள பதிவுகள் அடையாளம் காணப்பட்டு, சைபர் கிரைம் போலீஸால் நீக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றுடன் தொடர்புள்ள 38 வலைதளங்கள் மற்றும் வர்த்தக தளங்கள் அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பிரதமர் மோடி, சத்குரு உள்ளிட்டோரின் புகைப்படங்கள், காணொலிகளை பயன்படுத்தி முகநூலில் முதலீட்டு மோசடிகளை ஊக்குவித்த 18 பதிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய 15 வலைதளங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கு சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, சந்தேகத்துக்குரிய இணைப்புகள் அல்லது லிங்குகளை கிளிக் செய்வதை சமூக ஊடக பயனர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணுக்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டோ புகார் அளிக்கலாம் என்றும் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x