Published : 13 Apr 2025 12:07 AM
Last Updated : 13 Apr 2025 12:07 AM

வழக்கை விரைவில் முடிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கடையம் பெண் காவல் ஆய்வாளர் கைது

வழக்கை விரைவில் முடித்து, வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடையம் காவல் நிலைய பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த மணி என்பவரது மகன் செல்வகுமார். விவசாயியான இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள செல்வகுமார், தினமும் கடையம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு வருகிறார். இந்த வழக்கில் செல்வகுமாரின் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், செல்வகுமார் தன் மீதான வழக்கு தொடர்பாக, கடையம் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, வழக்கை விரைவில் முடித்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை விடுவிக்க ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறும் ஆய்வாளர் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், இது தொடர்பாக தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனப் பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று, ஆய்வாளர் மேரி ஜெமிதாவிடம், செல்வகுமார் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான போலீஸார், காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை கைது செய்தனர். லஞ்ச வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x