Published : 11 Apr 2025 06:20 AM
Last Updated : 11 Apr 2025 06:20 AM
சென்னை: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நைஜீரியா, சூடான் நாடுகளைச் சேர்ந்த 10 பேர் உட்பட 17 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்தும் கும்பலை கைது செய்யும் வகையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்ற சிறப்புப் பிரிவு சென்னையில் தொடங்கப்பட்டது.
அப்பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 9-ம் தேதி அண்ணாசாலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூருவைச் சேர்ந்த நிக்கில் என்பவர் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 2 பேர் சென்னையிலும், ஒருவர் பெங்களூருவிலும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடுத்தடுத்து மேலும் சிலர் கைதாகினர். இது தொடர்பாக சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், எழும்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை சென்னையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் நைஜீரியா மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்டோபர் முயோகா (25), எஃபியோங் உக்போங் (45), எதிம் இதா (38), சமீர் சலா நூரெல்தீன் (35), சிகேமெஸ்க்ல் நியூனே (27), பெனார்ட் ஓக்ன்கோ ஜூயல் (45), ஓகோஎக்புனெம் (25), இம்ரான் (31), கிரண் பன்னிக்கர் (35) ஆகியோர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுவதில்லை. பிற மாநிலங்கள் குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு பகுதிகளில் இருந்தே தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் கடத்திவரப்படுகின்றன. இவற்றை கண்டுபிடித்து நாங்கள் பறிமுதல் செய்து வருகிறோம். அந்த வகையில் கடந்த 8 மாதங்களில் போதைப் பொருள் தொடர்பாக 996 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் தொடர்புடைய 2,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 135 பேர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 352 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் ரூ.21 கிலோ மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளோம். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.21 கோடியாகும். போதைப் பொருளுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார். உடன் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT