Last Updated : 10 Apr, 2025 09:20 PM

 

Published : 10 Apr 2025 09:20 PM
Last Updated : 10 Apr 2025 09:20 PM

சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகளையும் பதிவு செய்த கோவை சைபர் க்ரைம் போலீஸ்!

கோவை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் 15 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுகன்யா. இவர், கடந்தாண்டு மே மாதம் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதில், ‘‘சென்னையைச் சேர்ந்த யூடியூபரான சவுக்கு சங்கர், பெண்கள் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயரதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. அதன் பேரில், சைபர் க்ரைம் போலீஸார், தகாத வார்த்தையில் பேசுதல், பெண்களை அவதூறாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அவரை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் தொடர்ச்சியாக புகார்கள் அளிக்கப்பட்டன. அது தொடர்பாக, சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதியப்பட்டு, தொடர்ந்து அந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைகளை ஒரே இடத்துக்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சவுக்கு சங்கர் மீதான அவதூறு வழக்குகளை கோவைக்கு மாற்றி, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்குகள் விசாரணை தொடர்பாக, டிஜிபி அலுவலகத்தில் இருந்து புரோசிடிங் ஆர்டர் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கோவை சைபர் கிரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மீதான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் இன்று (ஏப்.10) போலீஸார் கூறும்போது, ‘‘யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில் முதல் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தற்போது விசாரணை நிலையில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாநகர், திருச்சி மாவட்டம், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், சிவகங்கை, தருமபுரி, சேலம், சென்னை, நாகப்பட்டினம், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 15 இடங்களிலுள்ள காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகள் இங்கு மாற்றப்பட்டு, 15 புதிய வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக தொடர்புடைய காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும் வந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தேவைப்பட்டால் சவுக்கு சங்கருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x