Published : 10 Apr 2025 06:57 AM
Last Updated : 10 Apr 2025 06:57 AM
சென்னை: கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் நண்பருடன் கைது செய்யப்பட்டார். மேலும், காரை ஓட்ட அனுமதித்ததாக சிறுவனின் தந்தை சிறையிலடைக்கப்பட்டார்.
வடபழனியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் 14 வயதுடைய தனது மகனிடம் கார் சாவியை கொடுத்து குமரன் நகர் 7-வது தெருவில் நிறுத்தி வைத்துள்ள கார் மீது கவர் போடுமாறு கூறி அனுப்பி உள்ளார்.
ஆனால், அந்த சிறுவன், தன்னுடன் நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் பிரதான சாலை வழியாக, காரில் ஒரு ரவுண்ட் சுற்றி வருவதற்காக காரை ஓட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில், வடபழனி குமரன் நகர் 5-வது குறுக்கு தெரு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கார், சாலை ஓரம் நின்ற ஆட்டோ மற்றும் சாலையில் நடந்து சென்ற முதியவர் உட்பட இருவர் மீது அடுத்தடுத்து மோதி, பின்னர் ஒரு மரத்தின் மீது மோதி நின்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விரைந்தனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், காயமடைந்தவர்கள் சாலிகிராமம் தனலட்சுமி காலனி வெங்கடேஸ்வரா தெருவைச் சேர்ந்த மகாலிங்கம்(69), நளன் தெருவைச் சேர்ந்த உணவு விநியோக ஊழியர் கங்காதரன்(49) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன், காரில் அமர்ந்து சென்ற அவரது நண்பரான 13 வயது சிறுவன் மற்றும் அவர்களது பெற்றோரை வரவழைத்து போலீஸார் விசாரித்தனர்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய சிறுவன், உடன் சென்ற அவரது நண்பர் மற்றும் சிறுவன் கார் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். சிறுவர்கள் இருவரும் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், சிறுவனின் தந்தை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT