Published : 10 Apr 2025 06:16 AM
Last Updated : 10 Apr 2025 06:16 AM
தஞ்சாவூர்: சகோதரரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதைக் கண்டித்து காவல் நிலையம் முன் விஷமருந்திய சகோதரிகள் 2 பேரில் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியைச் சேர்ந்தவர் அய்யாவு. கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்துள்ளார். இவரது மகன் தினேஷ்(32), மகள்கள் மேனகா(31), கீர்த்திகா(29). தினேஷ் மீது 10-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அண்மையில் அய்யாவுவை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அணுகி, கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றுத் தருமாறு கேட்டுள்ளனர். அவர்களை தினேஷ் கண்டித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கிடையே கைகலப்பு நேரிட்டுள்ளது. அப்போது, தினேஷ் ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நடுக்காவேரி காவல் ஆய்வாளர் சர்மிளா மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் தினேஷை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது, தினேஷின் சகோதரி மேனகா, தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதால் தினேஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என போலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், போலீஸார் தினேஷை அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதைக் கண்டித்து அன்று மாலை தினேஷின் சகோதரிகள் 2 பேரும் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதையறிந்த போலீஸார் 2 பேரையும் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், கீர்த்திகா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேனகா தீவிர சிகிச்சையில் உள்ளார்.
தகவலறிந்த உறவினர்கள் 100-க்கும் அதிகமானோர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் திரண்டு, கீர்த்திகா உயிரிழப்புக்கு காவல் ஆய்வாளர் சர்மிளாதான் காரணம் என்று குற்றம்சாட்டி, அவரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.
மேலும், கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் தஞ்சாவூர் டிஎஸ்பி சோமசுந்தரம் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கீர்த்திகா பி.இ. படித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT