Published : 10 Apr 2025 12:04 AM
Last Updated : 10 Apr 2025 12:04 AM
சென்னை: அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஜிப்லி ஆர்வலர்களுக்கு சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஜிப்லி கலையில் இருக்கும் ஆபத்து குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. ஜிப்லி வரைகலை புகைப்படங்களை வழங்குவதற்கு இப்போது பல்வேறு செல்போன் செயலிகள் உள்ளன. இவற்றில் அங்கீகாரம் இல்லாத செயலிகளும் உள்ளன.
ஆனால் பொதுமக்கள், அறியாமையினால் அங்கீகாரம் இல்லாத செயலிகளிலும் ஜிப்லி அனிமேஷன் புகைப்படங்களை பெறுவதற்காக தங்களது பயோமெட்ரிக் தரவுகளையும், புகைப்படங்களையும் வழங்குகின்றனர். இதன் மூலம் அங்கீகாரமற்ற செயலிகள், ஒருவரது பயோமெட்ரிக் தரவுகளையும், புகைப்படங்களையும் 3-வது நபரிடம் வழங்கும் ஆபத்து உள்ளது.
இதனால் ஒருவருக்கு எந்த அச்சறுத்தலும் வர வாய்ப்பு உள்ளது. மேலும் அங்கீகாரம் இல்லாத செயலிகள், ஒருவரது பயோ மெட்ரிக், புகைப்படங்களை விளம்பர நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்கும்போது, அவை டீப்ஃபேக்குகளில் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. ஜிப்லி அனிமேஷன் புகைப்படங்களை இலவசமாக வழங்கும் இணையதளங்கள், செயலிகளில் பல்வேறு ஆபத்துக்கள் உள்ளன. இந்த வகை இணையத்தளம், செயலிகளுக்குள் ஒருவர் செல்லும்போது, அவரது செல்போனும், கணினியும் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படும் வாய்ப்பும், அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே இப்படிப்பட்ட இணையதளங்களையும், செயலிகளையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும், இப்படிப்பட்ட மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க, அங்கீகாரம் இல்லாத செயலிகள், இணையதளங்களில் இருந்து வால்பேப்பர்கள், ஆர்ட் பேக்குகள் உள்ளிட்ட எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மின்னஞ்சல்கள், ஆன்லைனில் வரும் இணையதள விளம்பரத்துடன் வரும் தொடர்புகள், இலவச ஜிப்லி சேவைகள் ஆகியவற்றை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். பரிவர்த்தனை, சுய விவரங்களை பதிவிடும் முன்பு, சம்பந்தப்பட்ட இணையத்தளத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
கணினி, செல்போன்களில் கண்டிப்பாக வைரஸ் தடுப்பு உள்ளிட்ட மென்பொருள் இருப்பது கட்டாயமாகும். இவ்வகை மோசடியினால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT