Published : 09 Apr 2025 07:01 AM
Last Updated : 09 Apr 2025 07:01 AM

சென்னை | ஐபிஎல் போட்டியின்போது செல்போன் திருடிய வழக்கு: ஜார்க்கண்டை சேர்ந்த மேலும் 3 பேர் கைது

சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்களின் செல்போன்கள் அடுத்தடுத்து திருடப்பட்ட வழக்கில் 8 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

அப்போது, 30-க்கும் மேற்பட்ட ரசிகர்களின் செல்போன்கள் அடுத்தடுத்து திருடப்பட்டன. இதில், கூட்டத்தோடு, கூட்டமாக ரசிகர்களோடு கலந்த செல்போன் திருடர்கள், தங்கள் கைவரிசையைக் காட்டியிருந்தது தெரியவந்தது.

மொத்தம் 69 செல்போன்கள் பறிமுதல்: இதுகுறித்து, திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக வேலூரில் பதுங்கி இருந்த ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 4 இளஞ்சிறார்கள் உள்பட 8 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 38 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர ஷாகினி (30), அதே மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் குமார் (24) மற்றும் ஒரு இளஞ்சிறார் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 31 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x