Published : 08 Apr 2025 07:48 PM
Last Updated : 08 Apr 2025 07:48 PM
மதுரை: மதுரையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் 2 மடங்கு லாபம் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸ்காரர், அவரது மனைவி மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டோர் மதுரை ஆட்சியரிடம் கொடுத்த புகார் மனுவின் விவரம்: “மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் தங்கராஜ். இவர், புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார். இவரது மனைவி பிரேமலதா. இவர்கள் இருவரும் குயின் (QUEEN) டிரேடிங் என்ற பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி மதுரையிலுள்ள விடுதி ஒன்றில் கூட்டம் நடத்தினர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்கள் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலும் முதலீடுகளை ஈர்த்துள்ளனர். முதலீடுக்கான 3 மாத லாப தொகையை முதலில் வழங்கிய நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான லாபத் தொகையை வழங்கவில்லை. இச்சூழலில் முதலீட்டு பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக அந்த தம்பதியர் கூறினர்.
இதற்கிடையில், பிப்ரவரி 24-ம் தேதி முதல் இருவரும் மாயமாகிவிட்டனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சுமார் ரூ.25 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது தெரிகிறது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியர் துரித நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்,” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் கூறுகையில், “இதில் தொடர்புடைய ரமேஷ் தங்கராஜ் என்பவர் புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்ததால் அவரை நம்பி பணம் செலுத்தினோம். அவரும் அவரது மனைவியும் சேர்ந்து எங்களை ஏமாற்றியுள்ளனர். எங்களுடைய பணம் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.
காவல் துறையிடம் கேட்டபோது, “போலீஸ்காரர் ரமேஷ் தங்கராஜ் 3 மாதம் மருத்துவ விடுமுறையில் இருந்தார். பிப்.27-ம் தேதி பணிக்கு வரவேண்டும். ஆனாலும் அவர் வரவில்லை. அவருக்கு எதிராக புகார் அளித்தவர்களிடம் விசாரிக்கிறோம். ரமேஷ் தங்கராஜ் இருப்பிடம் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT