Published : 08 Apr 2025 04:18 AM
Last Updated : 08 Apr 2025 04:18 AM
சென்னை: சென்னை அசோக் நகர், சீனிவாச பிள்ளை தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தொழில் அதிபர் வெங்கட்ரமணன் (58). இவர், பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் அவரது மகள்களை பார்க்க கடந்த 4-ம் தேதி அவரது மனைவியுடன் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் இருவர் உள்ளே புகுந்தனர்.
இதை வெங்கட்ரமணன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் அவரது செல்போனுக்கு அலர்ட் செய்தி வந்தது. இதை அறிந்து கொண்ட வெங்கட்ரமணன் அங்கிருந்தபடியே சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தகவல் கிடைத்த அசோக் நகர் போலீஸார் அந்த வீட்டுக்கு விரைந்தனர்.
ஆடிட்டர் அலுவலகத்திலும் திருட்டு: போலீஸார் வருவதை அறிந்த கொள்ளையர்கள் இருவரும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர். அவர்களை தனிப்படை போலீஸார் விரட்டிப் பிடித்து அசோக் நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து விசாரித்ததில் பிடிபட்டது பல்லாவரம் அலகானந்தபுரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (65), அவரது கூட்டாளி திருப்பத்தூர் அம்பேத்கர் நகர் பிலிப் (57) என்பது தெரிந்தது.
இவர்கள் இருவரும் சம்பவத்தன்று இரவு எதிரில் உள்ள ஒரு ஆடிட்டர் அலுலவகத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த பணத்தை திருடிக் கொண்டு பின்னர், தொழில் அதிபர் வெங்கட்ரமணனின் வீட்டு்க்குள் புகுந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள், வெள்ளி பொருட்கள், கவரிங் நகைகள், அமெரிக்க டாலர் கரன்சிகள், இந்திய பணம் மற்றும் 2 ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டன. கைதான கமலகண்ணன் மீது ஏற்கெனவே சுமார் 70 குற்ற வழக்குகளும், பிலிப் மீது 20 குற்ற வழக்குகளும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT