Published : 06 Apr 2025 05:39 PM
Last Updated : 06 Apr 2025 05:39 PM
சென்னை: புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் மாமூல் கேட்டு மிரட்டியதாக அதிமுக வட்டச் செயலாளர் ஐஸ்ஹவுஸ் எஸ்.மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அப்துல் ரஹ்மான் (38) என்பவர் புதிதாக ஓட்டல் ஒன்றை திறந்து நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி இரவு 7 மணியளவில் அந்த ஓட்டலுக்கு டிப்டாப் உடை அணிந்து கொண்டு ஒருவர் சென்றுள்ளார்.
வந்தவர், தன்னை இந்த பகுதி அதிமுக வட்டச் செயலாளர் என ஓட்டல் உரிமையாளர் அப்துல் ரஹ்மானிடம் அறிமுகம் செய்துள்ளார். மேலும், ஓட்டல் திறப்பு விழாவுக்கு ஏன் என்னை அழைக்கவில்லை. எங்களுக்கு தகவல் கூட தெரிவிக்க மாட்டீங்களா? என கண்டிப்பு காட்டி உள்ளார். மேலும், எங்களுக்கு தினமும் அல்லது மாத மாமூல் தர வேண்டும். அப்படித் தரவில்லை என்றால் இந்த பகுதியில் ஓட்டல் நடத்த முடியாது என மிரட்டி உள்ளார். ஆனால், அப்துல் ரஹ்மான் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். இதனால், அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.
அன்றைய தினம் இரவு 11.30 மணியளவில் 2 நபர்கள் அப்துல் ரஹ்மான் ஓட்டலில் வந்து அதிகளவில் சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், புதிதாக திறந்த ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தவர்கள், ஏற்கெனவே ஓட்டல் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டி சென்ற அதிமுக திருவல்லிக்கேணி கிழக்குப் பகுதி, 120 தெற்கு வட்டச் செயலாளர் ஐஸ்ஹவுஸ் எஸ்.மூர்த்தி தூண்டுதலின் பேரில் தகராறு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக அவரை சிறைக்கு அனுப்பும் முன்பு மருத்துவப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுஒருபுறமிருக்க ஐஸ்அவுஸ் எஸ்.மூர்த்தியை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT