Published : 05 Apr 2025 08:31 PM
Last Updated : 05 Apr 2025 08:31 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் தற்போதைய ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் தொழிலாளியான இவர் கடந்த 17-9-1999-ம் ஆண்டு ஒரு வழக்கு விசாரணைக்காக தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். போலீஸார் அவரை லாக்கப்பில் வைத்திருந்தனர். அங்கு போலீஸார் தாக்கியதில் 18-9-1999-ல் வின்சென்ட் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உயிரிழந்த வின்சென்டின் மனைவி கிருஷ்ணம்மாள், தனது கணவரை போலீஸார் அடித்துக் கொலை செய்துவிட்டதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று, காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், காவலர்கள் ஜெயசேகரன், ஜோசப் ராஜ், பிச்சையா, செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம்சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன், சோமசுந்தரம், ஜெயசேகரன், பிச்சையா, வீரபாகு, ஜோசப்ராஜ், செல்லத்துரை, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று (ஏப்.5) தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வு பெற்ற காவலர்கள் சிவசுப்பிரமணியன், ரத்தினசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பியாக உள்ளார்.
காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தற்போதும் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் ஆய்வாளராக உள்ளார். காவலர் பிச்சையா அதே பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மேலும், தண்டனை பெற்றுள்ள ஜெயசேகரன், ஜோசப் ராஜ், செல்லதுரை, வீரபாகு, சுப்பையா மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வழக்கு விசாரணையின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் முழுயையாக ஓய்வு பெற இதுவரையில் அரசு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி.எஸ்.பி. உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது தென்மாவட்டத்திலேயே இதுதான் முதன் முறை என்று கூறப்படுகிறது. வழக்கில் தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இதில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மனைவி, மகள்கள், பேரன்கள், பேத்திகள் என பலரும் தண்டனை அறவிப்பை கேட்டதும் கதறி அழுதனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT