Published : 02 Apr 2025 08:51 PM
Last Updated : 02 Apr 2025 08:51 PM
கோவில்பட்டி: எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்ததாக பேராசிரியர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 292 மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 121 மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். மேலும், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 59 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர், கார்மென்ட் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயதுடைய மாணவி தனக்கு மெக்கானிக்கல் பிரிவு விரிவுரையாளர் மதன்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட முதல்வர் பேபிலதா கல்லூரி பெண்கள் பாதுகாப்பு கமிட்டியிடம் (விசாகா) விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த கமிட்டியினார் புகார் அளித்த மாணவி, பெற்றோரை அழைத்து விசாரித்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கவனத்துக்கு சென்றது. அதைத் தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இன்று (ஏப்.2) மதியம் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் வந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் மதன்குமார் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் கேட்டபோது, “பாலியல் தொல்லை தொடர்பாக புகார் வந்திருப்பது உண்மைதான். பெண்கள் பாதுகாப்பு கமிட்டி விசாரித்துக் கொண்டிருக்கிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகுதான் எதையும் தெளிவாக சொல்ல முடியும்,” என்றார்.
திருமணமாகி ஓராண்டாகிறது... - தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தேவர்குளத்தைச் சேர்ந்தவர் விரிவுரையாளர் மதன்குமார். 2021-ம் ஆண்டு நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று 2022-ம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது.
பாஜக ஆர்ப்பாட்டம்: மாணவியிடம் தவறாக நடந்த விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி இன்று மாலை எட்டயபுரம் பாரதியார் பாலிடெக்னிக் முன்பு திரண்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT