Published : 02 Apr 2025 05:59 PM
Last Updated : 02 Apr 2025 05:59 PM
சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல ஓட்டலில் பிரியாணி, சவர்மா சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதைத் தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி ஹைரோட்டில் இயங்கி வரும் பிரபல ஓட்டலில் கடந்த 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரியாணி, சவர்மா உள்ளிட்ட உணவுகளை உட்கொண்ட திருவல்லிக்கேணி, பழைய வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 20 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனை, தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த ஓட்டல் மதியம் 1 மணி முதல் இரவு வரை இயங்கக் கூடியது என்பதால், புகாரின் அடிப்படையில் ஓட்டலில் சோதனை மேற்கொள்வதற்காக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் வருகை தந்தனர். ஆனால், ஓட்டலின் உரிமையாளர்கள் விவரம் தெரிந்து ஓட்டலின் நுழைவு வாயில்களை மூடிவிட்டு சென்றுவிட்டனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் செல்போன் மூலம் உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது.
பின்னர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகளுடன் இணைந்து ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சதீஷ்குமார் கூறுகையில், “முறையான சோதனை நடத்தப்படும் வரை மக்கள் ஹோட்டலில் சாப்பிட்டு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தற்காலிகமாக பூட்டியுள்ளோம். உரிமையாளர்கள் தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.
ஓட்டலில் போடப்பட்டுள்ள பூட்டை எங்களது அனுமதியின்றி உடைத்தால் கிரிமினல் குற்றமாக அது கருதப்படும். பொது மக்களுக்கு எதாவது ஏற்பட்டால் உணவு பாதுகாப்புத் துறை சும்மா விடாது. உரிய விளக்கம் தரும்வரை இக்கடையை திறக்கவிடமாட்டோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT