Published : 02 Apr 2025 06:10 AM
Last Updated : 02 Apr 2025 06:10 AM
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்கள் போர்வையில் அடுத்தடுத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 8 பேர் கும்பலை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 38 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியின்போது 20-க்கும் மேற்பட்ட ரசிகர்களின் செல்போன்கள் அடுத்தடுத்து திருடப்பட்டன.
செல்போன்களை பறிகொடுத்த ரசிகர்கள் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். அதன்படி, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கிரிக்கெட் மைதானத்தில் பதிவான அனைத்து வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளையும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், செல்போன் பறிப்பு கும்பல் அடையாளம் காணப்பட்டது. அவர்கள் சேப்பாக்கத்திலிருந்து கோயம்பேடு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் வேலூருக்கு சென்றதும், பின்னர் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை துப்பாக்கி முனையில் சென்னை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதில், பிடிபட்டவர்கள் ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (22), ஆகாஷ் நோநியா (23), விஷால் குமார் மாட்டோ (22), கோபிந்த் குமார் (21) என்பதும், இவர்களுடன் மேலும் 4 சிறுவர்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 8 பேரையும் கைது செய்து போலீஸார் சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 38 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கும்பல் கடந்த மார்ச் 22-ம் தேதி பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியிலும் ரசிகர்களிடமிருந்து செல்போன்களை திருடிவிட்டு வேலூர் வந்து பதுங்கி இருந்ததும், அடுத்தடுத்து நடைபெற உள்ள போட்டிகளில் இதேபோல் திருட்டில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
அதோடு மட்டும் அல்லாமல் ஐபிஎல் போட்டி மட்டுமல்லாமல் அதிகளவு மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து செல்போன்களை இக்கும்பல் திருடி வந்தது தெரியவந்ததாக திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
திருடப்பட்டது எப்படி? - கள்ளச் சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற்று கும்பல் மைதானத்துக்குள் நுழைந்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களின் கூட்டத்துக்குள் புகுந்தும், உணவுக் கூடங்களில் நுழைந்தும் அங்கு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. பெரியவர்கள் என்றால் சந்தேகம் வரும் என்பதற்காக செல்போன் திருட்டு கும்பல், திருடுவதற்காக சிறுவர்களை பயன்படுத்தியுள்ளது. முன்னதாக அவர்களுக்கு செல்போன் திருடுவது தொடர்பாக சிறப்பு பயிற்சியையும் கும்பல் வழங்கியுள்ளது.
இக்கும்பலுக்கு ராஜ்குமார் மூளையாக செயல்பட்டுள்ளார். இவர் கடந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது செல்போன்களை திருடியதாக சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், சிறையிலிருந்து வெளியே வந்து சொந்த மாநிலம் சென்று, அதன் பிறகு மேலும் 7 பேரை திரட்டி அழைத்து வந்துள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செல்போன்களை பறிகொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை போலீஸாரால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஏஐ மூலம் செயல்படும் சென்னை சிங்கம் ஐபிஎல் செயலி வழியாக புகார் தெரிவித்திருந்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையில், கொள்ளை கும்பலை பிடித்த போலீஸாரை காவல் ஆணையர் அருண் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT