Published : 01 Apr 2025 08:45 PM
Last Updated : 01 Apr 2025 08:45 PM
கடலூர்: திட்டக்குடி அருகே கள்ளநோட்டு அச்சடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் இருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (39), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர், தனது வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ளநோட்டு அச்சடித்ததாக நேற்று ராமநத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 2 பேரைக் கைது செய்தனர். ஆனால், செல்வம் தப்பியோடினார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்களைப் பிடிக்க கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் ஜம்புலிங்கம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, அதர்நத்தம் அஜித் (24), அரவிந்த் (30), ம.பொடையூர் வடிவேல்பிள்ளை (28), கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் சக்திவேல் (27) ஆகிய 4 பேரையும் இன்று கைது செய்தனர். இவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து எஸ்.பி. ஜெயக்குமார் கூறும்போது, “அடிதடி வழக்கில் கைதானவர்களைப் பிடிப்பதற்காக போலீஸார் அதர்நத்தம் கிராமத்துக்குச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். அதன் பின்னர்தான் அங்கு கள்ளநோட்டு அச்சடிப்பது தெரியவந்தது. ரூ.83 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், ரிசர்வ் வங்கியின் போலி முத்திரை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முக்கியக் குற்றவாளியான செல்வத்தை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய வெளிமாநிலத்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT