Published : 01 Apr 2025 12:17 PM
Last Updated : 01 Apr 2025 12:17 PM
செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் மதுரை நோக்கி சென்ற காரின் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் காரில் பயணித்த 1வயது குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.
மதுரை பொதும்பூர் சிக்கந்தர் சாவடி ஜானகி நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் கார்த்திக் (40). இவர் சென்னை பேரூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு தனது மனைவி நந்தினி (32) குழந்தைகளான 7வயது சிறுமி இளமதி, 1 வயது குழந்தை சாய்வேலன் மற்றும் நந்தினியின் தந்தை அய்யனார் (70), அவரது மனைவி தெய்வ பூஞ்சாரி (52) மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் (24) ஆகியோர் மதுரை நோக்கி ஹூண்டாய் காரில் சென்றனர்.
சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி அருகே நேற்று இரவு 10:15 மணியளவில் சிக்னலில் கார் நின்றது. அப்பொழுது காரின் பின்னால் அதிவேகமாக வந்த பாரத் பென்ஸ் டிப்பர் லாரி மோதியதில் கார் முன்னே நின்றிருந்த கனரக கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் இரண்டு லாரிகளுக்கும் இடையே சிக்கிய அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த கார் ஓட்டுநர் சரவணன், நந்தினியின் தந்தை அய்யனார், ஓரு வயது குழந்தை சாய்வேலன், ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் இருந்த கார்த்திக், நந்தினி, நந்தினியின் தாயார் தெய்வ பூஞ்சாரி மற்றும் 7வயது சிறுமி இளமதி ஆகியோர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் விபத்தை ஏற்படுத்திய செங்கல்பட்டு பாத்திமா நகரை சேர்ந்த லாரி ஓட்டுநர் அந்தோணி ராஜ் ( 42) காயமடைந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.
விபத்து குறித்து தகவலறிந்து அங்குவந்த மறைமலைநகர் போலீஸார், மற்றும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் ஆகியோர் கிரேன் மூலம் காரில் இருந்தவர்களின் உடலையும் காயமடைந்தவர்களையும் மீட்டனர்.சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டு குடும்பத்துடன் ஊர் திரும்பிய நிலையில் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT