Last Updated : 29 Mar, 2025 06:43 PM

 

Published : 29 Mar 2025 06:43 PM
Last Updated : 29 Mar 2025 06:43 PM

உசிலம்பட்டி காவலர் கொலையில் தொடர்புடைய நபரை சுட்டுப் பிடித்த தனிப்படை போலீஸார் - நடந்தது என்ன?

உசிலம்பட்டி தலைமை காவலர் கொலை வழக்கில் சுட்டுப்பிடிக்கப்பட்ட பொன்வண்ணன் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள பிரபாகர், சிவனேஷ்வரன் மற்றும் பாஸ்கர்

தேனி: உசிலம்பட்டி அருகே காவலர் கொலை வழக்கில் தொடர்புடைய பொன்வண்ணனை கேரள எல்லையில் தனிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொன்வண்ணன் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மது போதையில் தகராறு: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளரின் ஓட்டுநர், தலைமை காவலர் முத்துக்குமார் (36). தற்செயல் விடுப்பில் இருந்த இவர் கடந்த 27-ம் தேதி உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்த சென்றார். அப்போது இவருக்கும், தேனி மற்றும் உசிலம்பட்டியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் காவலர் முத்துக்குமாரை அந்த நபர்கள் தாக்கினர். இதுகுறித்து முத்துக்குமார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

கல்லால் தாக்கில கொலை: போலீஸார் கிளம்பிச் சென்ற பிறகு இரு தரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் காவலர் முத்துக்குமாரை அந்த கும்பல் கல்லால் தாக்கி கொலை செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் காவலரை கொலை செய்தவர்கள் தேனி காக்கிவாடன்பட்டியைச் சேர்ந்த பொன்வண்ணன் (29), தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் (28), பிரபாகரன் (29), சிவனேஸ்வரன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

வருசநாடு காட்டில் பதுங்கல் - இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதனை அறிந்த கொலை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இரண்டு டூவீலர்களில் விருதுநகர் மாவட்டம் வழியாக மல்லப்புரம்-மயிலாடும்பாறை வனச்சாலை வழியே தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிக்கு சென்றனர். பின்பு அங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் பதுங்கினர். இச்சாலையில் உள்ள தாழையூத்து வனச்சோதனைச் சாவடி கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்த போது அவர்கள் 4 பேரும் வருசநாடு பகுதிக்கு வந்திருப்பது தெரியவந்தது.

6 தனிப்படை அமைப்பு: இதனைத் தொடர்ந்து மதுரை தென்மண்டல ஐ.ஜி.பிரேமானந்த் சின்ஹா தலைமையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.வந்திதாபாண்டே, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட எஸ்.பி.க்கள் சிவபிரசாத், பிரதீப், அரவிந்த் ஆகியோர் நேற்று தேனியில் முகாமிட்டனர். 6 தனிப்படைகள் அமைத்து வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச்சூடு: இந்நிலையில், வருசநாடு வனப்பகுதியில் பதுங்கிய குற்றம்சாட்டப்பட்டவர்கள் கம்பம் வனச்சரகம் வழியே கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது கம்பம்மெட்டு மலைச்சாலை அருகே குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் அவர்களை பிடிக்க முயன்றனர்.

மருத்துவமனையில் அனுமதி: அப்போது பொன்வண்ணன் போலீஸாரை ஆயுதத்தால் தாக்கத் தொடங்கினார். இதில் காவலர் சுந்தரபாண்டியனுக்கு இடது கையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் ஆனந்த், பொன்வண்ணனை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் மார்பு, தோள்படடையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற மூன்று பேரையும் கைது செய்ததுடன், காயம்பட்ட காவல் துறை காவலர் சுந்தரபாண்டியன், பிடிபட்ட பொன்வண்ணன் ஆகியோரை கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு பொன்வண்ணனை மட்டும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர் ஆபத்தான நிலையிலே இருந்து வருகிறார். சுடப்பட்ட பொன்வண்ணன் மீது சிறுமியை திருமணம் செய்ததாக போக்சோ வழக்கு உள்ளது. மேலும் திருமணம் குறித்த பிரச்சினையில் உறவினர் ஒருவரையும் கொலை செய்துள்ளார். அந்த வழக்கு உட்பட அவர் மீது பல்வேரு வழக்குகள் இருந்து வருகிறது.

கைது செய்யப்பட்ட பாஸ்கரன் மற்றும் பிரபாகரன் சகோதாரர்கள் ஆவர். ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பு தொடர்பான பிரச்சினையில் இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உளளது. மற்றொரு நபரான சிவனேஸ்வரன் மீது நண்பரின் தந்தையை கொலை செய்த வழக்கும், வழக்கறிஞர் கடத்தல் வழக்கும், குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக கூறி பண மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் தேனி மாவட்டம், கேரள எல்லையில் சுட்டுப் பிடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x