Published : 29 Mar 2025 04:43 PM
Last Updated : 29 Mar 2025 04:43 PM

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஊரப்பாக்கம் மாணவி தற்கொலை

ஊரப்பபாக்கம்: ஏற்கெனவே மூன்று முறை நீட் தேர்வில் தோல்வியுற்றிருந்த நிலையில், 4-வது முறையாக நீட் தேர்வுக்காக படித்து வந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த அந்த மாணவி, சென்னை முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் 2021- ஆம் ஆண்டு 12 -ஆம் வகுப்பு படித்து முடித்து, பின்னர் வீட்டில் இருந்து கொண்டே நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள நீட் பயிற்சி அகாடமியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்பில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

அந்த மாணவி ஏற்கெனவே மூன்று முறை நீட் தேர்வில் தோல்வியுற்று தற்போது நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்துவிட்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் அகாடமி சென்று வந்தவர், இன்று தனது தந்தையிடம் மனது கஷ்டமாக இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை ‘நான் பார்த்துக் கொள்கிறேன், நீ பயப்படாமல் படி’ என்று ஆறுதல் சொல்லியுள்ளார்.

மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி, வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிளாம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உடலை மீட்ட போலீஸார் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x