Published : 28 Mar 2025 05:42 PM
Last Updated : 28 Mar 2025 05:42 PM
திருநெல்வேலி: பெண்களிடம் பில்லி, சூனியத்தை அகற்றுவதாக கூறி அத்துமீறிய மதபோதகர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், கருப்பூரில் வசித்து வருபவர் ஜோசுவா இம்மானுவேல் (47). கோவில்பட்டி பசுவந்தனை சாலை, பாண்டவர்மங்கலம் பகுதியை பூர்விகமாக கொண்டவர். கிறிஸ்தவ மத போதகரான இவர்ம் ஜெபம் செய்து பில்லி, சூனியம் அகற்றுவதாக கூறி பெண்களை தனியாக அழைத்து சென்று நகைகளை பறித்துக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், படித்து முடித்த பட்டதாரி பெண்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பெண்களின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி நகைகளையும் பறித்து விடுவதாகவும் கடந்த 2016-ம் ஆண்டில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து திருநெல்வேலி தாழையூத்தை சேர்ந்த 24 வயதான பெண், பாப்பான்குளத்தை சேர்ந்த 26 வயதான பி.எட் கல்லூரி மாணவி உள்ளிட்டோர் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதில் தாழையூத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகாரில், ஜோசுவா இம்மானுவேல் தான் ஒரு மதபோதகர் எனவும், ஜெபம் செய்து பில்லி, சூனியம் அகற்றினால் குடும்பம் விருத்தி அடையும் எனவும் கூறி சேலத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், தன்னை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்துக்கொண்டு 10 சவரன் நகையை பறித்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்தார்.
இதுபோல் பி.எட். கல்லூரி மாணவியும் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னை நிர்வாணப்படுத்தி, 6 பவுன் நகையை பறித்து மிரட்டியதாவும் புகார் அளித்தார். அதன்பின் ஜோசுவா இம்மானுவேல் உட்பட 4 பேர்தான் தனது சாவுக்குக் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அந்த மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து 2 பெண்களின் புகார்களின் பேரில் தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜோசுவா இம்மானுவேல், அவரது ஓட்டுனரான விருதுநகர், சாத்தூரைச் சேர்ந்த வினோத் குமார் (32) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், தாழையூத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகார் மீதான வழக்கு விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கை நீதிபதி பன்னீர்செல்வம் விசாரித்து, ஜோசுவா இம்மானுவேலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.54 ஆயிரம் அபராதமும், வினோத் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT