Published : 27 Mar 2025 06:55 AM
Last Updated : 27 Mar 2025 06:55 AM
சென்னை: கணவரின் உடல் நிலை சரியாக பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி பெண்ணிடம் நகை பறித்த சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி சைதாப்பேட்டை சாலை பகுதியில் வசித்து வருபவர் சசிகலா (50). சசிகலாவின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி சசிகலா வீட்டுக்கு சாமியார் ஒருவர் வந்தார்.
அப்போது, ‘உனது கணவரின் உடல்நிலை சரியாக, பரிகார பூஜை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் இறந்து விடுவார்’ என சசிகலாவிடம் கூறியுள்ளார். இதனால், பயந்துபோன, சசிகலா பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது, மூன்றரை பவுன் தங்க நகையையும் வைத்து பூஜை செய்துள்ளார்.
பூஜை முடிந்து, பூஜை பொருட்களை, கணவரின் அறையில் வைத்துவிட்டு திரும்பி வந்தபோது, மூன்றரை பவுன் நகையுடன் சாமியார் மாயமானதைக் கண்டு சசிகலா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, அவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து மூன்றரை பவுன் நகையை மீட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT