Last Updated : 19 Mar, 2025 05:26 PM

 

Published : 19 Mar 2025 05:26 PM
Last Updated : 19 Mar 2025 05:26 PM

ஜாகிர் உசேன் கொலையில் தொடர்புடைய நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த நெல்லை போலீஸ்!

இடது: கைதான முகமது தௌஃபிக் (எ) கிருஷ்ணமூர்த்தி | வலது: கொல்லப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலி

திருநெல்வேலி: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான முகமது தௌஃபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை, நெல்லை மாநகர போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.

இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து முக்கிய நபரான தௌஃபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், தௌஃபிக் திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியாப்பட்டியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, அங்கு சென்ற போலீஸார் தௌஃபிக்கை சுற்றி வளைத்தனர். அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலைமைக் காவலர் ஆனந்த்தை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர். அதனால், உடனிருந்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதில் காயமடைந்த முகமது தௌஃபிக் மற்றும் தலைமைக் காவலர் ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன? - திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற இவர், திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார்.

ரம்ஜான் நோன்பு இருந்த அவர் நேற்று (மார்ச் 18) அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு, தெற்கு மவுன்ட் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக ஜாகிர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஜாகிர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு, டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது” என்றனர்.

கொலை செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, ஜாகிர் உசேன் பிஜிலி வெளியிட்ட வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், தான் கொலை செய்யப்படலாம் என்றும், இந்தக் கொலைக்கு மூலகாரணம் நெல்லை டவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனும், நெல்லை மாநகர உதவி ஆணையர் விஜயகுமாரும்தான் என்று கூறியிருந்தார்.

நெல்லை டவுன் தொட்டி பாலம் தெரு அருகேயுள்ள எனது 36 சென்ட் இடத்தை அபகரிக்க முயன்றதை தடுத்தேன். அந்த நபர் கொடுத்த பொய் புகாரின் பேரில், நெல்லை டவுன் போலீஸார் பிசிஆர் வழக்கு பதிவு செய்தது வெட்கக்கேடு. பட்டியலின இளைஞர், மதம் மாறிய பின்னர், பிசிஆர் பிரிவில் எவ்வாறு வழக்கு பதிவு செய்ய முடியும் என்று ஜாகீர் உசேன் காணொலியில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கொலை சம்பவம் குறித்து இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாசிக்க > “சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது” - நெல்லை கொலை சம்பவத்தில் ஸ்டாலின் விளக்கம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x