Published : 18 Mar 2025 04:06 PM
Last Updated : 18 Mar 2025 04:06 PM
கிழக்கு தாம்பரம் சேலையூரில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை கூலி தொழிலாளிகளை குறிவைத்து அமோகமாக நடைபெறுகிறது. இதைத் தட்டி கேட்டால் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேற்றப்படுகிறது. தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை வரை சென்றதால் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் கிழக்கு தாம்பரம் சேலையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிழக்கு தாம்பரம், காந்தி நகர் பூங்கா, சேலையூர், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம், வேங்கைவாசல், சேலையூர், மாடம்பாக்கம் காவல் நிலையம் பின்புறம் என பல்வேறு பகுதிகளில் லாட்டரி கும்பல் ரகசியமாக, திறந்தவெளியில் விற்பனை செய்து வருகிறது.
இம்முறையில் கேரளா, சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு மாநில லாட்டரிகளின் ஆன்லைன் குலுக்கல் நேரத்துக்கு ஏற்ப இக்கும்பல் துண்டு சீட்டில் நம்பர் எழுதி வழங்குகிறது. ஒரு லட்சம் பரிசுக்கு ரூ.50, கூடுதல் பரிசுக்கு ஏற்ப, 120, 360, ஆயிரம் ரூபாய் என்றும், அதற்கு ஆங்கில எழுத்து வரிசையுடன் எண்களை எழுதி விற்பனை செய்கின்றனர்.
குறிப்பிட்ட நேரத்தில் அந்த பெயருடைய லாட்டரி குலுக்கல் முடிந்து, முடிவுகள் ஆன்லைன் வாயிலாக வெளியிடப்படும். அந்த முடிவுகளின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான பரிசுகளை மட்டும் வழங்கும் அக்கும்பல், பெரிய அளவில் பரிசுகள் விழுந்தால் பரிசுகளை கொடுக்காமல் ஏமாற்றும் வகையில் கேட்பவர்களை அடித்து விரட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அதேபோல் வாட்ஸ்அப் வாயிலாக லாட்டரி வாங்கும் நபர்கள் போட்டி சீரியல் எண்களை வாட்ஸ்அப் வழியாக பெற்று, தங்களுக்கு ராசியான எண்ணை எழுதி தந்தால் அதனை மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டு பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். பல லட்சம் ரூபாய் பரிசு விழும்; வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள், ஏழை குடும்பங்களை சேர்ந்த பலர் இந்த சட்டவிரோதமான லாட்டரிகளை வாங்குகின்றனர். இதனால் பல குடும்பங்கள் வாழவழியின்றி லாட்டரி மோசடியால் பாதித்து வருவதோடு, ஏமாற்றத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
சேலையூர் காவல் நிலைய எல்லையில் மட்டும் நம்பர் லாட்டரி மோசடியில் தினமும், 10 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது. இதை யாரேனும் தட்டி கேட்டால் அவர்களை தாக்குவதும் நடந்து வருகிறது. இதனால் யாரும் காவல் துறையினரை அணுகுவதில்லை. அப்படி அணுகினாலும் அதுகுறித்த தகவல் லாட்டரி கும்பலுக்கு தெரிவிடுகிறது. இதனால் புகார் செய்பவர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் சட்டவிரோத லாட்டரி விற்பனை குறித்து யாரும் புகார் சொல்ல முன்வருவதில்லை. இதனால், தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை களைகட்டி வருகிறது.
இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் சண்முகம் கூறியது: தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டே லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுவிட்ட போதிலும், நம்பர் லாட்டரி சூதாட்டம் விற்பனை இன்றளவும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், சேலையூர் காவல் எல்லை பகுதிகளில் நம்பர் லாட்டரி சூதாட்டம் நடப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வருகின்றன.
அதுகுறித்து நேரடியாக தெரிந்து கொள்ள பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். அவை அனைத்தும் உண்மை என தெரிந்தது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை குறித்து போலீஸாருக்கு தெரிவித்தேன். பிறகு தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்தேன். அங்கிருப்பவர்களுக்கு போன் வந்தது. உடனே இடத்தை காலி செய்துவிட்டனர். இதனால் போலீஸாருக்கு தெரிந்தேதான் இது நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
தாம்பரம் சுற்றுவட்டாரங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெகு விமரிசையாக நடக்கிறது. தட்டி கேட்டால் தாக்குதல் சம்பவங்களும் நடக்கிறது. இதில் என் நண்பர் பாதிக்கப்பட்டார். இந்த நம்பர் லாட்டரி சூதாட்டத்தில் தாங்கள் உழைத்த பணத்தை இழந்து ஆயிரக்கணக்கானோர் தவித்து வரும் நிலையில், இதனை முற்றிலும் ஒழிக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் உயர் அதிகாரிகள் இதில் நேரடியாக தலையிட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT