Published : 16 Mar 2025 12:54 PM
Last Updated : 16 Mar 2025 12:54 PM
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவரை பணத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்ய திட்டமிட்டு ஒரு கும்பல் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் சக்கரவர்த்தி தலைமையில், அடையாறு மற்றும் பரங்கிமலை காவல் துணை ஆணையர்கள் கண்காணிப்பில், சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், வேளச்சேரி - தரமணி இணைப்பு சாலையில் தனிப்படை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேர், போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரைச் சேர்ந்த வினோத் (27), மணலி அழகு மலையைச் சேர்ந்த பால முருகன் (23), மாதவரத்தைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பதும், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக் கடை அதிபரை கடத்திச் சென்று கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களைக் கைது செய்த போலீஸார், இந்த சம்பவத்தில் வேறு நபர்கள் தொடர்புள்ளதா ? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் உரிய நேரத்தில் தடுத்து துரிதமாகச் செயல்பட்ட போலீஸாரை சென்னை காவல் ஆணையர் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT