Published : 14 Mar 2025 03:36 PM
Last Updated : 14 Mar 2025 03:36 PM
மதுரை: சிறுமி பாலியல் வழக்கில் பாஜக பொருளாதார பிரிவு தலைவர் ஷாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா. மதுரை திருமங்கலத்தில் கல்லூரி நடத்தி வருகிறார். இவரை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக போக்சோ சட்டத்தில் மதுரை திலகர் திடல் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி எம்.எஸ்.ஷா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘என் மீது கடந்த மார்ச் 2024-ல் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஜனவரி 13 முதல் சிறையில் இருந்து வருகிறேன். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஏற்கெனவே மனு தாக்கல் செய்தேன். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, போலீஸார் தரப்பில் என் மீது தவறுதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீண்டும் வழக்குப் பதிவு செய்து என்னை கைது செய்துள்ளனர். என் மீது வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஏற்கெனவே முடிந்துள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் 2 முறை மனு தாக்கல் செய்து தள்ளுபடியானது. 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறேன். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அடுத்த பத்து நாளில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இந்த மனு நீதிபதி சக்திவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, ''மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் சென்னையில் தங்கியிருந்து மறு உத்தரவு வரும் வரை அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்'' என நிபந்தனை விதித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT