Published : 14 Mar 2025 10:47 AM
Last Updated : 14 Mar 2025 10:47 AM
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பின்னோக்கி இயக்கப்பட்ட கார், 80 அடி உயர கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில், காரை இயக்கிய விவசாயி மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர் என இருவர் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த முள்ளிக்காபாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். (40) விவசாயி. திருமணமான இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தனது உறவினர் காரினை எடுத்துக் கொண்டு நேற்று மாலை சிவக்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். காரினை ஓரமாக நிறுத்துவதற்காக, சிவக்குமார் பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது இவரது வீட்டின் அருகில் உள்ள 80 அடி உயர கிணற்றின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, கிணற்றுக்குள் கார் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கிணற்றில் 40 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்த நிலையில், கார் முழுமையாக மூழ்கியது. காரில் இருந்த சிவக்குமார் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கினார். அருகில் இருந்தோர் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிரேன் உதவியுடன் காரினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகும் காரினை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கொடிவேரி மற்றும் பவானிசாகரைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்த அழைத்து வரப்பட்டனர். கிணற்றில் அதிக அளவு நீர் இருப்பதால், தங்களால் இறங்க முடியாது என மீனவர்கள் தெரிவித்ததால், மின் மோட்டார்கள் உதவியுடன், கிணற்றில் இருந்த நீரில் பாதி வெளியேற்றப்பட்டது.
இதன் பிறகு, 4 மீனவர்களும் கிணற்றில் இறக்கி கார் மற்றும் சிவக்குமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே கிணற்றுக்குள் கவிழ்ந்த காரில் இருந்து வெளியேறிய பெட்ரோல் மற்றும் ஆயில் காரணமாக, கிணற்று நீர் நச்சுத்தன்மையாக மாறியது. இதனால், கிணற்றில் மூழ்கி சிவகுமாரை மீட்க முயற்சித்த மீனவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில், கொடிவேரியைச் சேர்ந்த மூர்த்தி (42) என்ற மீனவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
விடிய, விடிய மீட்புப் பணி நடந்த நிலையில், இன்று அதிகாலை கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டது. காரில் இருந்த விவசாயி சிவக்குமார், மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மீனவர் மூர்த்தி ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டன. இவர்களது உடல்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக சத்தியமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT