Published : 14 Mar 2025 07:56 AM
Last Updated : 14 Mar 2025 07:56 AM
சென்னை: ரஷ்ய அரசு பெயரில் ரூ.2,000 கோடி முதலீடு பெற்று தருவதாக ரூ.7.32 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் இந்தோ ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்தோ - ரஷ்யன் அசோசியேட் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருபவர் அருண்ராஜ் (38). இவர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆலிவ் பீச்சில் வசிக்கிறார். இவர் இந்தோ-ரஷ்யன் தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதி என்று கூறி என்னிடம் அறிமுகமானார்.
மேலும், ரஷ்ய அரசு இந்திய திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்ய முன் வந்துள்ளது. திருச்சியில் நான் நடத்தி வரும் வியாபார திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை முதலீடு பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதற்கு அவர் கமிஷனாக என்னிடமிருந்து ரூ.7 கோடியே 32 லட்சத்து 45,000 பெற்றுக் கொண்டார்.
மேலும், எனது நிறுவனத்தில் ரஷ்ய நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக போலியான ரஷ்ய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை காண்பித்தார். அவை போலி என்பது பின்னர்தான் தெரிய ஆரம்பித்தது. அருண்ராஜையும், அவரது கூட்டாளிகளையும் தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, என்னிடம் மோசடி செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் தெரிவித்து இருந்தார்.
9 பேர் கைது: இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக அருண்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி ரூபாள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அவர்களிடமிருந்து 476 பவுன் தங்கம், 400 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.14.50 லட்சம் ரொக்கம், 11 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது இந்தோ ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் பொதுச் செயலாளர் தங்கப்பன் (68) கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று இக்கும்பல் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் சின்னசாமி என்பவரிடமும் இதே பாணியில் ரஷ்ய நிறுவனத்திடமிருந்து ரூ.4.4 கோடி முதலீடு பெற்றுத் தருவதாக கூறி கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கிலும் தற்போது அருண்ராஜ் மற்றும் ரூபா கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT