Published : 12 Mar 2025 12:23 PM
Last Updated : 12 Mar 2025 12:23 PM

கள்ளத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ‘பெல்’ அதிகாரி தற்கொலை - திருச்சியில் அதிர்ச்சி

உயிரிழந்த சண்முகம்

திருச்சி: 'பெல்' நிறுவன பொது மேலாளர் ஒருவர் தனது அலுவலகத்துக்குள் கள்ளத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில், பெல் கணேசபுரம் 8-வது தெருவை சேர்ந்த சண்முகம் (50), இணைப்பில்லா குழாய் வடிவமைப்பு (எஸ்எஸ்டிபி) பிரிவில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பார்வதி இப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களது ஒரே மகள் பொறியியல் படித்து வருகிறார்.

பெல் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு பல்வேறு ஷிப்டுகள் அடிப்படையில் பணி நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன. அதிகாரிகளுக்கு மட்டும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சண்முகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார். மாலை 4.30 மணிக்கு பணி முடிந்தும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி மொபைல் போனில் தொடர்புகொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை. பெல் நிறுவனத்தை தொடர்புகொண்ட போது, அவரது அறைக் கதவு சாத்தியிருப்பதாக தெரிவித்தனர்.

இரவு நேரம் செல்லச் செல்ல சண்முகம் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். அவரது மனைவி பார்வதி மீண்டும் பெல் நிறுவன உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களின் உத்தரவின்படி அங்கிருந்த ஊழியர்கள் சண்முகம் அறைக்கு சென்றனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அதிகாலை 1.30 மணிக்கு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சண்முகம் அங்குள்ள சோபாவில், நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடத்தார். சோபா அருகே ரத்தம் பெருகி ஓடி, உறைந்து கிடந்தது

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக பெல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பெல் போலீசார், சண்முகத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு சோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சண்முகத்துக்கு இருதயநோய் பிரச்சினை இருப்பதும், அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

கள்ளத் துப்பாக்கி: சண்முகம் சுட்டுக்கொண்டு இறந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை. அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பதும், சண்முகம் டெல்லியில் பணியாற்றியபோது அந்தத் துப்பாக்கியை வாங்கி இருக்கலாம் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சண்முகம் தற்கொலைக்கான காரணம் குறித்து பெல் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பெல் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x