Published : 11 Mar 2025 01:01 PM
Last Updated : 11 Mar 2025 01:01 PM
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் ஹெப்சிகுடாவில் நிதிப்பிரச்சினை மற்றும் உடல்நிலை பாதிப்புக் காரணமாக 40 வயது கணவன் மற்றும் 35 வயது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகவும், முன்னதாக தங்களின் இரண்டு குழந்தைகளை தம்பதி கொலை செய்துள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
கணவன் மனைவி இருவரது உடல்களும் தனித்தனி அறைகளிலும், அவர்களின் மைனர் குழந்தைகளின் உடல்கள் உயிரற்ற நிலையில் படுக்கை அறையிலும் காணப்பட்டது. இது குறித்து உஸ்மானியா பல்கலை. காவல் நிலைய ஆய்வாளர், என். ராஜேந்திரன் கூறுகையில், “சம்பவம் ஹிப்சிகுடா பகுதியில் உள்ள ரவிந்திராநகர் காலனியில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் இரவு 9.30 மணியளவில் நடந்துள்ளது. அருகில் இருப்பவர்கள் கொடுத்த தகவலின்படி, நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினோம்.
முதல்கட்ட விசாரணையில், தம்பதி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தங்களின் குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. நாங்கள் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்தக் குடும்பத்தினர், மெஹபூப்நகர் மாவட்டம், கல்வகுர்த்தி தாலுகா, முகுரலல்லா கிராமத்தில் இருந்து ஒரு வருடத்துக்கு முன்புதான் ஹப்சிகுடாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அந்த ஆண் முன்பு தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். என்றாலும் கடந்த ஆறு மாதங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். நீண்ட காலம் வேலை இல்லாமல் இருந்தது அந்த குடும்பத்தினை கடும் நிதி நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இது தற்கொலைக்கு வழிவகுத்திருக்கலாம்.” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், உயிரிழந்த அந்த நபர் எழுதியதாக கூறப்படும் தற்கொலை குறிப்பு ஒன்றை கைப்பற்றியதாக போலீஸார் தெரிவித்தனர். தெலுங்கில் எழுதப்பட்ட அந்தக் குறிப்பில், "என்னுடைய மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை.எனக்கு வேறு வழியில்லாததால் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் எனது வாழ்க்கை மற்றும் தொழிலில் மிகவும் சிரமப்படுகிறேன். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் போராடிவருகிறேன். நான் நீரழிவு மற்றும் நரம்பு பிரச்சினை மற்றும் சிறுநீரக பாதிப்பால் போராடுகிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT