Last Updated : 06 Mar, 2025 08:02 PM

 

Published : 06 Mar 2025 08:02 PM
Last Updated : 06 Mar 2025 08:02 PM

2023 உடன் ஒப்பிடுகையில் 2024-ல் தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்ததாக டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

டிஜிபி சங்கர் ஜிவால் | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாகவும், ரவுடிகளின் அட்டூழியம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (மார்ச் 6) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், தமிழகத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்த வகையில் 2023-ல் ஆதாயக் கொலைகள் 83 ஆக இருந்த நிலையில், 2024-ல் இது 75 ஆக (10 சதவீதம்) குறைந்துள்ளது.

இதேபோல், 2023-ல் 133 ஆக இருந்த கூட்டுக் கொள்ளை , 2024-ல் 110 ஆக குறைந்துள்ளது, அதாவது 17 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் திருட்டு வழக்குகள் 10.65 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2023-ல் 17,788 ஆக இருந்த திருட்டு, 2024-ல் 15,892 ஆக குறைந்துள்ளது.இதுமட்டும் அல்லாமல் 2023-ல் கொலை, கொலை முயற்சி, கொலையாகாத மரணம் உள்ளிட்ட வகைகளில் 49,286 வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வழக்குகள் 2024-ல் 31,497 ஆக குறைந்திருந்தது. இதனால், 2023-ஐ ஒப்பிடுகையில் 2024-ல் 17,789 வழக்குகள் (36.12 சதவீதம்) குறைந்துள்ளன.

இதேபோல் 2023-ல் 110 ஆக இருந்த கொலை வழக்குகள் 2024-ல் 63 வழக்காக குறைந்தது. இது 2023-ஐ ஒப்பிடும்போது 2024-ல் 47 வழக்குகள் அதாவது 47.72 சதவீதம் குறைவாகும். இதேபோல் 2023-ல் 3694, 2024-ல் 4572 சமூக விரோதிகள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கலவர வழக்குகளும் 5.8 சதவீதம் (2023-ல் 1,305, 2024-ல் 1,229) குறைந்துள்ளது.

தமிழக காவல் துறையின் முன்னெச்சரிக்கை மற்றும் ரவுடிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை காரணமாக 2024-ம் ஆண்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. குறிப்பாக கொலை மற்றும் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x