Published : 06 Mar 2025 07:12 PM
Last Updated : 06 Mar 2025 07:12 PM
ராமநாதபுரம்: பரமக்குடியில் மூன்று பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஏற்கெனவே நடந்த கொலைக்கு பழி தீர்க்க கொலை செய்யப்பட்டாரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி மகன் உத்திரகுமார் (35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சென்னையில் வழக்கறிஞராக இருந்து வந்தார். பரமக்குடி பகுதியில் அரசு ஒப்பந்தப்பணிகளும் செய்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னையில் ராமநாதபுரம் மாவட்டம் பகைவென்றி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கொலை வழக்கில், உத்திரகுமார் சிறையில் இருந்துவிட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு உத்திரகுமார் சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மூன்று பேர், உத்திரகுமாரை தலை மற்றும் முகத்தில் வாளால் சரமாரியாக வெட்டினர். இதில் உத்திரகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரமக்குடி நகர் போலீஸார் உத்திரகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தார்.
வியாழக்கிழமை காலை பரமக்குடி அரசு மருத்துவனை முன்பு உத்திரகுமாரின் உறவினர்கள், கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பரமக்குடி நகர் போலீஸில் உத்திரகுமாரின் உறவினர் பாலமுருகன், உத்திரகுமார், பழனிச்சாமி இடையே ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்தததாகவும், அதனால் பழனிச்சாமியின் குடும்பத்தினர் கூலிப்படையினரை வைத்து கொலை செய்துள்ளதாகவும் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், பகைவென்றியைச் சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ராஜேஸ்வரி, மகள் லேகாஸ்ரீ, மகன் விஷ்ணு பிரதான் மற்றும் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். பழனிச்சாமி கொலைக்கு பழி தீர்க்க உத்திரகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT