Published : 06 Mar 2025 12:31 PM
Last Updated : 06 Mar 2025 12:31 PM

பல்லாவரம்: தந்தையை கொலைசெய்தவரை பழி வாங்க கடத்தல்: மடக்கிப் பிடித்த போலீஸ்

கைது | கோப்புப் படம்

பம்மல்: பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகரில் முன் பகை காரணமாக தந்தையை கொலை செய்த குற்றவாளியை பழிக்குப் பழி வாங்குவதற்காக காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர், திருமுடிவாக்கம் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சூர்யா(எ)ஈசாக் (29). இவர், கடந்த 2021 -ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளி என்று கூறப்படுகிறது. அது முதல் சூர்யா தலைமறைவாக இருந்து வந்தார். தங்களது தந்தையை கொலை செய்த சூர்யாவை பழிக்குப் பழி வாங்குவதற்காக அவரது மகன்கள் மாரிச்செல்வன் (30), பூபாலன் (29) மற்றும் வெங்கடேசன் (27) ஆகிய மூன்று பேரும் சமயம் பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு பம்மல், சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்வீஸ் ரோடு பகுதியில் சூர்யா நிற்பதாக மாரிச்செல்வன் உள்ளிட்டோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற மாரிச்செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள், நண்பர்கள் என்று மொத்தம் ஐந்து பேர் கும்பல் சேர்ந்து, சூர்யாவை வலுகட்டயமாக காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு, குன்றத்தூர் அடுத்த தண்டலம் நோக்கிச் சென்றனர். செல்லும் வழியில் அவரது தலையில் கற்களால் சரமாரியாக தாக்கி, சித்திரவதை செய்தனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சங்கர் நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீஸார், தண்டலத்தில் மாரிச்செல்வன் கும்பலின் தாக்குதலால் படுகாயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சூர்யா (எ)ஈசாக்கை பத்திரமாக மீட்டு, அவரை சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஈசாக்கை தாக்கிய மாரிச்செல்வன், அவரது சகோதரர்கள் பூபாலன், வெங்கடேசன் உள்ளிட்ட ஐந்து பேரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ஐந்து பேரையும் சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, தங்களது தந்தை செல்வராஜை கொலை செய்த சூர்யாவை, பழிக்குப் பழி வாங்குவதற்காக கடத்திச் சென்று சித்திரவதை செய்தது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஐந்து பேரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x