Published : 06 Mar 2025 07:07 AM
Last Updated : 06 Mar 2025 07:07 AM
சென்னை: தந்தையை கொலை செய்துவிட்டு உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் ஆட்டோவில் வழக்கறிஞரை சந்திக்கச் சென்ற பொறியாளரை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் பாராட்டினர்.
சென்னை நங்கநல்லூர், தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் முரளிதரன் (65). கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரோகிணி. இவர்களது மகன்கள் பிரசன்னா வெங்கடேசன் (30), ஆதித்ய நாராயணன் (28). பொறியியல் பட்டதாரியான ஆதித்ய நாராயணன் படிப்பில் தங்கப் பதக்கமும் பெற்றிருந்தார். இவருக்கு சற்று மன நல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அடிக்கடி பணம் கேட்டு தந்தையிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால், தந்தை மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் தந்தை மகனுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ஆதித்ய நாராயணன் கத்திரிக்கோலால் தந்தையின் கழுத்தில் குத்தியதில், முரளிதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர், ஆதித்ய நாராயணன் ரத்தக் கறை படித்த உடையுடன், தாய் ரோகிணியை அழைத்துக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க அதே பகுதி வழியாக சென்ற ஆட்டோவை மறித்து ஏறியுள்ளார். அவர்கள் பதற்றத்துடன் இருப்பதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் மாதவரம், திருமுருகன் நகரைச் சேர்ந்த அப்துல் மாலிக்குக்கு (25) சந்தேகம் ஏற்பட்டது.
திருவல்லிக்கேணி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது ஆதித்ய நாராயணன் தனது சகோதரரை போனில் அழைத்து, “தந்தையை கொலை செய்து விட்டேன். நீ சென்று பார்த்து இறுதி சடங்கை முடித்துவிடு'' எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மாலிக், நேராக ஆட்டோவை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குள் ஒட்டிச் சென்றார்.
அங்கு ஆதித்ய நாராயணன் மற்றும் அவரது தாயை போலீஸாரிடம் ஒப்படைத்து நடந்த விவரத்தை தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் ஆதித்ய நாராயணன் அவரது தந்தையை கொலை செய்துவிட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் ஆதம்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கொலை விவரத்தை அறிந்து உஷாராகி, சரியான நேரத்தில் ஆதித்ய நாராயணனை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மாலிக்கை போலீஸ் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.
ஆதம்பாக்கம் போலீஸார் முரளிதரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆதித்ய நாராயணன் மட்டும் அல்லாமல் அவரது தாய் ரோகிணியும் மன நலப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT