Published : 06 Mar 2025 12:12 AM
Last Updated : 06 Mar 2025 12:12 AM
தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக (டிட்கோ) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தில் (டிட்கோ) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வருபவர் சூர்யபிரகாஷ் (51). இவர், கரூர் மாவட்டத்தில் 2016-2019-ம் ஆண்டுகளில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றினார். அப்போது, கரூரில் உள்ள தொழிலதிபர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2021-2022-ல் கரூரைச் சேர்ந்த கொசுவலை நிறுவன தொழிலதிபர் நல்லமுத்துவிடம், கொசுவலை ஆர்டர் பெற்றுத் தருவதாகக் கூறி சூர்யபிரகாஷ் ரூ.8 கோடி பெற்றுள்ளார். மேலும், சூரிய ஒளி மின்சக்தி நிறுவனத்தில் ரூ.8 கோடியை முதலீடு செய்ய வைத்துள்ளார்.
ஆனால், சூர்யபிரகாஷ் பெற்றுத் தந்த கொசுவலை ஆர்டர் போலியானது என்றும், சூரிய ஒளி மின்சக்தி முதலீட்டிலும் தான் ஏமாற்றப்பட்டிருப்பதும் நல்லமுத்துவுக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் நல்லமுத்து அண்மையில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இந்நிலையில், டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையிலான போலீஸார் சென்னை சென்று, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வரும் சூர்யபிரகாஷை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், விசாரணைக்காக கரூர் அழைத்து வரப்பட்ட சூர்யபிரகாஷிடம், எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
சூர்யபிரகாஷ் கரூர் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிபோது, வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிய கார்த்திகேயன் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த இடைத்தரகர்கள் ராஜ்குமார், முத்துக்குமார் ஆகியோரும் அவருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திரநாத் சின்ஹா, பார்த் பரத்வாஜ், சைலேந்திர ரஞ்சன், தற்போது பெங்களூருவில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பூபேஷ் ஆகியோரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT