Published : 05 Mar 2025 04:54 PM
Last Updated : 05 Mar 2025 04:54 PM
ஓசூர்: ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவி, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில், ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி என 20-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு 20 கிமீ தொலைவில் உள்ள அஞ்செட்டிக்கு சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இங்குள்ள மாணவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 -ம் வகுப்பு வரை உள்ளதால், அதற்கு மேல் படிக்க அஞ்செட்டிக்கு தினமும் சென்று வருகின்றனர். நீண்டதூரம் சென்று படிப்பதற்கு பெண் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவதற்கு தயங்கி 10 -ம் வகுப்பு மேல் படிக்க வைக்காமல் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் சிறுமிகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அந்த மலை கிராமத்தில் குழந்தை திருமணம் அதிகரிப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது .
இந்நிலையில், அங்குள்ள மலைகிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமியின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். அந்த சிறுமிக்கும், காலிகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஸ் (30) என்பவருக்கும் கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் திருணம் நடந்தது. பின்னர் இன்று அந்த சிறுமியை, மலைகிராமத்தில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
ஆனால், உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிகொண்டு சென்று கணவர் வீட்டில் மீண்டும் விட்டுள்ளனர். .அப்போது அந்த சிறுமி கதறி அழுததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்ளில் பரவவிட்டுள்ளனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT