Published : 05 Mar 2025 03:06 PM
Last Updated : 05 Mar 2025 03:06 PM
திருப்பூர்: திருப்பூரில் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.10 கோடி கொள்ளையடித்த கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் கீழநஞ்சைய தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (60). நகை வியாபாரியான இவர், ரயில் மற்றும் விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது கோவைக்கு காரில் வந்து நகை வாங்கிக்கொண்டு கரூர் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 4) மாலை இதுபோன்று கரூரில் இருந்து காரில் கோவைக்கு நகை வாங்க தனது டிரைவர் ஜோதியுடன் (60) வந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சம்பந்தம்பாளையம் பகுதியில் வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு கார் வந்துள்ளது. திடீரென அந்த கார் இவர்களது கார் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஷ் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர்களும் காரை நிறுத்தினர். அப்போது அந்த காரில் இருந்து 4 பேர் இறங்கி வந்துள்ளனர்.
4 பேரும் போலீஸ் என கூறியுள்ளனர். மேலும் நீங்கள் காரில் கஞ்சா கடத்துவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது? இதனால் காரை சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் வெங்கடேஷ் தாங்கள் கஞ்சா கடத்தவில்லை என்றும், நகை வாங்க கோவை செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காரில் இருந்த ரூ.1 கோடியே 10 லட்சம் பணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது நகை வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 4 பேரும் இதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் எனக்கூறி, காரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர்களை அவிநாசிபாளையம் வழியாக தாராபுரம் செல்லும் சாலையில் குண்டடம் பிரிவு அருகே அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து வெங்கடேஷ் மற்றும் ஜோதியை கைகளால் தாக்கியும், மிரட்டியும் காரில் இருந்த ரூ.1 கோடியே 10 லட்சம் பணம் மற்றம் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தப்பி சென்றுள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த வெங்கடேஷ் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் நடந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இந்த சம்பவம் அவிநாசிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவிநாசிபாளையம் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.10 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT