Published : 05 Mar 2025 06:18 AM
Last Updated : 05 Mar 2025 06:18 AM
சென்னை: திரையரங்கில் இருதரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகா (21). சென்னையில் தங்கி, உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் அவரது நண்பர்கள் சந்தோஷ், சிவா, விக்கி ஆகியோருடன் கடந்த 28-ம் தேதி இரவு, வடபழனியில் உள்ள திரையரங்கில் இரவுக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். பாட்டில், கட்டையால் தாக்குதல் அப்போது, ஜெகாவின் நண்பர் சந்தோஷின் கால் முன் சீட்டில் இருப்பவரின் மீது பட்டுள்ளது.
இதனால், அந்த சீட்டில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் கோபம் அடைந்து திட்டினார். இதையடுத்து, நண்பருக்காக ஜெகா மன்னிப்பு கேட்டார். இருப்பினும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்தனர். பின்னர், படம் முடிந்த உடன் ஜெகா நண்பர்களுடன் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்.
இதற்கிடையில், முன்னதாக எதிர்தரப்பினர் போன் மூலம் அவர்களது நண்பர்களை திரையரங்க வளாகத்துக்கு வரவழைத்துள்ளனர். ஜெகா மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றபோது தயாராக நின்று கொண்டிருந்த கும்பல் ஜெகாவையும் அவரது நண்பர்கள் மூவரையும் பீர் பாட்டில், கட்டையால் சரமாரியாகத் தாக்கியது. ஜெகா தரப்பினர் எதிர்தாக்குதல் நடத்தினர். இருப்பினும், அந்த கும்பலை சமாளிக்க முடியவில்லை.
இதில், காயம் அடைந்த ஜெகா உள்ளிட்ட 4 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து வடபழனி காவல் நிலைய போலீஸார் திரையரங்க சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில், தாக்குதலில் ஈடுபட்டது அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்த தனுஷ் (23), கோடம்பாக்கத்தை சேர்ந்த ஈஸ்வரன் (27), நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (27) என்பது தெரிந்தது. அந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT