Published : 04 Mar 2025 12:02 AM
Last Updated : 04 Mar 2025 12:02 AM

மதுரையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை புல்டோசரால் மோதி சேதப்படுத்திய 17 வயது சிறுவன் கைது

மதுரையில் நள்ளிரவில் ஜேசிபி (மண் அள்ளும் இயந்திரம்) வாகனத்தை எடுத்துச் சென்ற 17 வயது சிறுவன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியுள்ளான். போதையில் இருந்த இச்சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை செல்லூர் 50 அடி ரோடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அப்பகுதியிலுள்ள ஜேசிபி உரிமையாளரிடம் கிளீனராக பணிபுரிந்தான். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அந்த சிறுவன் ஜேசிபி வாகனத்தை செல்லூர் - குலமங்கலம் மெயின் ரோட்டில் ஓட்டிச் சென்றுள்ளான். அப்போது செல்லூர் 50 அடி சாலையில் இருந்து கண்மாய்க்கரை சாலை வரையிலும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரம் நிறுத்தியிருந்த கார், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி சேதப்படுத்தியுள்ளான்.

மேலும், அப்பகுதியில் இருந்த இரும்புக்கடை ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி மீதும் ஜேசிபி வாகனம் மூலம் மோத முயன்றபோது, காவலாளி தப்பியதால் அவரது கட்டிலை நொறுங்கியுள்ளது. தொடர்ந்து வீடுகள், மின் கம்பங்கள் மீதும் ஜேசிபியால் மோதியுள்ளான். இதைப் பார்த்த அப்பகுதியினர் சிலர் செல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனார். இதைத் தொடர்ந்து ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனை பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அச்சிறுவன் நேற்று முன்தினம் இரவு செலவுக்கு பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். தர மறுத்த ஆத்திரத்தில் அப்பகுதியில் நின்ற ஜேசிபி வாகனத்தை எடுத்துச் சென்று சாலையோரம் நிறுத்தியிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள், மின் கம்பம் ஆகியவற்றின் மீது மோதி சேதப்படுத்தியுள்ளதும், குடிபோதையில் இச்சம்பவத்தில் சிறுவன் ஈடுபட்டதும் தெரிந்தது. இது தொடர்பாக செல்லூர் போலீஸார் சிறுவனை கைது செய்து, மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி பதிவு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x