Published : 23 Feb 2025 11:52 AM
Last Updated : 23 Feb 2025 11:52 AM
கொளத்தூரில் போலி ஆவணங்களை பயன்படுத்தி 2,400 சதுர அடி இடத்தை ரூ.48 லட்சத்துக்கு விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கிண்டி-வேளச்சேரி சாலையில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் மிருதுளா (41). இவர் தனது தந்தை சேஷூக்கு சொந்தமான 2,400 சதுர அடி காலி மனையை, சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, வேறொரு நபருக்கு ரூ.48,24,000-க்கு விற்பனை செய்து மோசடி செய்திருப்பதாக கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மிருதுளாவின் தந்தை சேஷூ, 1991-ம் ஆண்டு இறந்துவிட்டது போல, சேகர் என்பவர் தனது பெயரில் போலி வாரிசு சான்றிதழ் மற்றும் ஆவணங்களை பெற்று, அவரது மகனுக்கு தான செட்டில்மென்ட் செய்துள்ளார்.
பின்னர், ராஜன் என்பவருக்கு பவர் ஏஜெண்ட் கொடுத்து, அந்த நிலத்தை தேன்மொழி என்பவருக்கு ரூ.48,24,000-க்கு விற்பனை செய்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட, புத்தாகரம் பகுதியை சேர்ந்த பாபு (50), பெரும்பாக்கத்தை சேர்ந்த செல்வக்குமார் (27), சண்முக சுந்தரம் (56) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT