Published : 20 Feb 2025 12:04 AM
Last Updated : 20 Feb 2025 12:04 AM
சேலம்: கெங்கவல்லி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், மனைவி மற்றும் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த இரு குழந்தைகள் உயிரிழந்தனர். காயமடைந்த மனைவி, மற்றொரு மகள் மற்றும் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகேயுள்ள 74-கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவரது மனைவி தவமணி(38), குழந்தைகள் விஜயதாரணி(13), அருள்குமாரி(10), அருள்பிரகாஷ்(5). சில ஆண்டுகளுக்கு முன்னர் நெய்வேலிக்குச் சென்ற அசோக்குமார், அங்கு சகோதரருடன் தங்கி, ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கெங்கவல்லி வந்த அசோக்குமார், வீட்டில் இருந்தமனைவி, குழந்தைகளை அரிவாளால் வெட்டினார். இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி போலீஸார் அங்கு சென்றபோது, மகள் விஜயதாரணி, மகன் அருள்பிரகாஷ் ஆகியோர் இறந்து கிடந்ததும், மனைவி தவமணி, மற்றொரு மகள் அருள்குமாரி ஆகியோர் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும், வீட்டின் அருகில் அசோக்குமாரும் தலையில் வெட்டுக் காயங்களுடன் கிடந்தார். காயமடைந்த அனைவரையும் மீட்ட போலீஸார், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விஜயதாரணி, அருள்பிரகாஷ் ஆகியோரது உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மனைவி நடத்தையில் சந்தேகம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: நெய்வேலியில் ஒரு பெண்ணுடன் அசோக்குமார் நெருங்கிப் பழகியுள்ளார். அந்தப் பெண்ணின் சகோதரர் மிரட்டியதால், சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார், மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்து அரிவாளால் மனைவி, குழந்தைகளை வெட்டிவிட்டு, தன்னையும் வெட்டிக் கொண்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சைக்குப் பின்னர் அவரை கைது செய்து, விசாரணை நடத்தப்படும்” என்றனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, குடும்பத்தினர் அனைரையும் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிய சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT