Last Updated : 18 Feb, 2025 05:16 PM

 

Published : 18 Feb 2025 05:16 PM
Last Updated : 18 Feb 2025 05:16 PM

மணிப்பூர் பெண்ணிடம் செல்போன் பறித்த சம்பவம்: சென்னையில் காதல் ஜோடி கைது

சென்னை: சென்னையில் நடந்து சென்ற மணிப்பூர் பெண்ணிடமிருந்து ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறித்துச் சென்ற வழக்கில் சூர்யா என்பவரும், அவரது காதலி சுஜிதாவும் கைது செய்யப்பட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷல் பேம் (24). கடந்த சில மாதங்களாக மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோயில் தெருவில் தங்கி இருந்து மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5-ம் தேதி காலை 6 மணியளவில் தோழிகள் இருவருடன் ஆஷல் பேம் மெரினா கடற்கரைக்கு செல்ல புறப்பட்டார். பேருந்தில் செல்வதற்காக கோடம்பாக்கம் சாலையில் தோழிகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பெண் திடீரென ஆஷல்பேமின் ரூ.48,000 மதிப்பிலான செல்போனை பறித்துக் கொண்டு, அந்த இருசக்கர வாகனம் மின்னல் வேகத்தில் பறந்தது. இது தொடர்பாக ஆஷல் பேம் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்ததில் கைவரிசை காட்டியது மதுரவாயல் சூர்யா (வயது 19) என்பதும், அவர் பின்னால் அமர்ந்து இருந்தது அவனது காதலி ஆவடியை சேர்ந்த சுஜிதா (வயது 20) என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் செல்போனை மீட்டனர்.

மதுரவாயல் சூர்யா மீது பைக் திருட்டு, உண்டியல் திருட்டு என பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தனியார் டெலிவரி நிறுவனத்தில் பகல் நேரத்தில் வேலை பார்த்தாலும் இரவு நேரத்தில் தனது காதலியுடன் சேர்ந்து செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு அந்த உடமைகளை விற்று ஜாலியாக இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவரது காதலி சுஜிதாவுக்கு, ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. சுஜிதாவின் முதல் கணவர் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி சிறைக்கு சென்று விடுவாராம். இந்த நிலையில், சுஜிதாவின் நடவடிக்கைகள் சரியில்லாததால், முதல் கணவரின் பெற்றோர் அவரை விரட்டி அடித்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளையும் அவர்கள் தான் வளர்த்து வருகின்றனர்.இந்த நிலையில் தான் சுஜிதாவுக்கு சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் தூய்மைப் பணிக்கு செல்வது, இரவு நேரங்களில் காதலன் சூர்யாவுடன் ஊர் சுற்றியபடி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x